இந்திய தேசிய தொழிற் கொள்கை
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
ஒரு நாட்டின் தொழில் கொள்கை என்பது, அந்நாட்டின் தொழில்துறை நிறுவனங்களைத் தோற்றுவிப்பதற்கான கொள்கைகள், செயல் முறைகள், அவற்றைக் கட்டுப் படுத்தக் கூடிய சட்ட திட்டங்கள், அவற்றிற்கான நிதி ஆதாரங்கள் பற்றிய கொள்கைகள், தொழிலாளர் சட்டங்கள் போன்ற அனைத்து விடயங்களையும் பற்றி வரையறுத்துக் கூறுவதாகும்.
இந்தியாவின் முதல் தொழில்துறைக் கொள்கை தீர்மானம், 1948 ஆம் ஆண்டில் வெளியிடப்பட்டது.
தொழில் கொள்கை தீர்மானம் - 1948
[தொகு]1948 ஆம் ஆண்டில் வெளியிடப்பட்ட தொழில் கொள்கை (Industrial Policy Resolution -1948), கலப்புப் பொருளாதாரத்திற்கு வித்திடுவதாய் அமைந்தது. தனியார் துறைக்கென சில தொழில்களும் பொதுத் துறைக்கென சில தொழில்களும் ஒதுக்கப் பட்டன. தொழில் துறைகள், அடிப்படையில் நான்கு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டன.
- ஆயுதங்கள், வெடிமருந்துகள், அணுசக்தி உற்பத்தி மற்றும் கட்டுப்பாடு, இரயில் போக்குவரத்து ஆகியவை முற்றிலும் நடுவண் அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும்
- நிலக்கரி, இரும்பு மற்றும் எக்கு, வானூர்தி தயாரிப்பு, கப்பல் கட்டுதல், தொலைபேசி தயாரிப்பு, தந்தி மற்றும் கம்பியில்லாத் தகவல் தொடர்பு சாதனங்கள் உற்பத்தி போன்ற துறைகளில் புதிய தொழிற்சாலைகளை அரசாங்கம் மட்டுமே தொடங்க முடியும்.
- அடிப்படை முக்கியத்துவம் வாய்ந்த சில தொழில் துறைகளை அரசாங்கம் மட்டுமே திட்டமிடவும் கட்டுப்படுத்தவும் முடியும்
- மீதமுள்ள தொழில் துறைகள் தனியார் பங்கேற்புக்கு விடப் படுகின்றன
தொழில்கொள்கை தீர்மானம் - 1956
[தொகு]இதன்படி தொழில் துறைகள் மூன்று பிரிவுகளாகப் பிரிக்கப் பட்டன. அரசாங்கம் தனது முழுப் பொறுப்பில் வைத்திருக்க விரும்பும் தொழில்கள் அட்டவணை - அ (A) ல் வகைப்படுத்தப் பெற்றன. அரசாங்கம் சில தொழில்களில் தானே முதன்மையாக இருக்வேண்டும் என விரும்பியது. இவற்றில் தனியார் நிறுவனங்கள் உறுதுணையாக இருக்கலாம். இத்தகைய தொழில்கள் அட்டவணை - ஆ (B) ல் வரிசைப் படுத்தப்பட்டன. ஏனைய தொழில்கள் அனைத்தும் தனியார் துறைக்கு விடப்பட்டன. [அட்டவணை - இ (C)]
அட்டவணை -அ
[தொகு]பதினேழு தொழில் துறைகள் இதில் இடம் பெற்றன
- ஆயுதங்கள் மற்றும் வெடி பொருட்கள்
- அணு சக்தி
- இரும்பு மற்றும் எக்கு
- இரும்பு மற்றும் எக்கினால் ஆன கனரக வார்ப்படங்கள்
- இரும்பு மற்றும் எக்கு உற்பத்திக்கான கனரக இயந்திரங்கள்
- கனரக மின்னுற்பத்தி சாதனங்கள்
- நிலக்கரி
- கனிம எண்ணெய்கள்
- சுரங்கத் தொழில்
- விமானத் தயாரிப்பு
- விமானப் போக்குவரத்து
- இரயில் போக்குவரத்து
- கப்பல் கட்டுதல்
- தொலைபேசி ,தந்தி கம்பியிலா தகவல் தொடர்பு சாதன உற்பத்தி
- மின்னுற்பத்தி மற்றும் விநியோகம்
அட்டவணை -ஆ
[தொகு]பன்னிரு தொழில்கள் இதன் கீழ் வந்தன
- பிற சுரங்கத் தொழில்கள்
- அலுமினியம் மற்றும் அட்டவணை - அ -ல் இல்லாத, இரும்பு அல்லாத பிற பொருட்கள்
- இயந்திரங்களுக்கான கருவிகள்
- இரும்பின் கலப்பு உலோகங்கள் மற்றும் உபகரணங்களுக்கான எக்கு
- இரசாயனத் தொழில்
- நுண்ணுயிர் எதிர்ப்பி மற்றும் இன்றியமையா மருந்துப் பொருட்கள்
- உரங்கள்
- செயற்கை இரப்பர்
- நிலக்கரி
- வேதிக் கூழ்மங்கள்
- தரைவழிப் போக்குவரத்து
- கப்பல் போக்குவரத்து
அட்டவணை -இ
[தொகு]மேற்கண்ட இரண்டு அட்டவணைகளிலும் வராத பிற தொழில்கள் இதில் இடம் பெற்றன. இவற்றிற்கு தனியாரின் பங்களிப்புகள் வரவேற்கப்பட்டன.
தொழில்கொள்கை அறிக்கை -1977
[தொகு]தேசிய தொழில்கொள்கை - 1956 (Industrial Policy Statement - 1977) இல் சில விரும்பத்தக்க விடயங்கள் இருந்தாலும் இக்கொள்கையைக் கடை பிடித்ததால் சில முரண்பாடுகளும் தோன்றி உள்ளதாக 1977 ஆம் ஆண்டு பதவிக்கு வந்த ஜனதா அரசு நினைத்தது. "வேலையில்லாத் திண்டாட்டம் அதிகரித்து விட்டதாகவும் கிராமங்களுக்கும் நகரங்களுக்கும் உள்ள வேறுபாடு அதிகரித்து விட்டது என்றும் உண்மையான முதலீட்டு விகிதம் குறைந்து விட்டது என்றும் " புதிய அரசு எண்ணியது. எனவே, தொழில்கொள்கை அறிக்கை -1977 உருவாக்கப்பட்டு வெளியிடப்பட்டது. இக்கொள்கையின் சிறப்பம்சங்கள் பின்வருமாறு:
- சிறுதொழில்களின் வளர்ச்சிக்கு முக்கியத்துவம் அளிப்பது
- பெரும் தொழில்களுக்காக பின்வரும் துறைகள் ஒதுக்கப்பட்டன
- பொதுத்துறை நிறுவனங்கள் விரிவு படுத்தப்படும்
- வெளிநாட்டுக் கூட்டுழைப்பில் புதிய அணுகுமுறை
- நலிந்த தொழில்களுக்குப் புதிய அணுகுமுறை
தொழில்கொள்கை - 1980
[தொகு]1956 ஆம் ஆண்டில் வெளியிடப்பட்ட தொழில் கொள்கையையே பின்பற்றுவது என்று அரசு முடிவு செய்தது. தொழில்துறை வளர்ச்சியே இதன் முக்கிய நோக்கமாக இருந்தது. பெரிய தொழில் நிறுவனங்களுக்கு உரிமங்கள் வழங்கப்பட்டன.
தொழில்கொள்கை - 1991
[தொகு]திரு நரசிம்மராவ் தலைமையில் அமைந்த புதிய காங்கிரஸ் அரசு 1991 ஆம் ஆண்டு ஜூலை திங்களில் தனது தொழில் கொள்கையை வெளியிட்டது. இதன் முக்கிய நோக்கங்கள்:
- இந்திய தொழில் துறையை அரசு அதிகாரிகளின் பிடியில் இருந்து விடுவிப்பது.
- இந்தியப் பொருளாதாரத்தை உலகப் பொருளாதாரத்துடன் ஒருமுகப்படுத்தும் வகையில் தாராளமயமாக்கல்
- நேரடி வெளிநாட்டு முதலீடுகளின் மேல் இருந்த கட்டுப்பாடுகளை தளர்த்துவது மற்றும் உள்நாட்டு வர்த்தகர்களுக்காக எம்.ஆர்.தி.பி சட்டத்தின் கட்டுப்பாடுகளை நெகிழ்த்துவது
- பல ஆண்டுகளாக நட்டம் ஈட்டி வருகிற அல்லது அரசுக்கு சுமையாக மாறிவிட்ட பொதுத் துறை நிறுவனங்களை தனியார்மயமாக்குவது.
தொழில் துறைக்கான உரிமம் வழங்கும் கொள்கை
[தொகு]கீழ் காணும் தொழில் துறைகளுக்கு கண்டிப்பாக உரிமம் பெறவேண்டும்
- நிலக்கரி மற்றும் பழுப்பு நிலக்கரி
- பெட்ரோலியம், அதன் சுத்திகரிப்பு
- சாராய உற்பத்தி
- சர்க்கரை
- விலங்குக் கொழுப்புகள் மற்றும் எண்ணெய்கள்
- புகையிலையில் இருந்து தயாரிக்கப்பட்ட சுருட்டு மற்றும் சிகரெட்டு மற்றும் அவற்றின் பதிலிகள்
- அஸ்பெஸ்டாஸ் மற்றும் அதன் அடிப்படையில் தயாரிக்கப்படும் பொருட்கள்
- மோட்டார் கார்கள்
- ஆபத்தான வேதிப்பொருட்கள்